தமிழ்நாடு முழுவதும் பொது விநியோக திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதரர்களுக்கு நியாயவிலை கடைகள் மூலமாக அரிசி இலவசமாகவும் துவரம் பருப்பு, சீனி, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் உள்பட கோடிக்கணக்கான மக்கள் மிகவும் பயன்பெற்று வருகின்றனர். மேலும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக பண்டிகைக்கு தேவையான இலவசமாக அத்தியாவசிய பொருள்கள் மற்றும் பரிசுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் அட்டை அடிப்படையில் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் தற்போது ஒரு கோடியே 16 லட்சம் பேர் பயனாளர்களாக இணைக்கப்பட்டுள்ள போதிலும் பலர் இன்னும் இந்த திட்டத்தில் இணையாமல் உள்ளனர். 2 கோடியே 24 லட்சத்துக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் உள்ள நிலையில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் திட்டத்தில் இணையமுடியாமல் உள்ளனர். இந்த நிலையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி ரேஷன் கார்டு வைத்திருக்கும் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு விரைவில் முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்தி மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து இதுகுறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் ஒவ்வொரு மாதமும் ஒரு கோடியே 16 லட்சம் மகளிருக்கு ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. அதில் சில குறைபாடுகள் இருக்கிறது. விரைவில் அதுவும் சரி செய்யப்படும். தகுதி உள்ள அனைத்து மகளிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். எனவே வரும் ஜனவரி மாதம் முதல் அல்லது பொங்கல் முதல் மகளிர் உரிமை தொகையில் இன்னும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என கூறப்படுகிறது. இதனால் சில காரணங்களால் உதவி தொகை கிடைக்காமல் போன பெண்கள் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. அதன்படி தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள் பலருக்கும் மகளிர் உரிமை தொகை கிடைக்கலாம் என அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் குடும்ப தலைவிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.