தமிழ் நாட்டில் பொதுவிநியோக திட்டத்தின் அடிப்படையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மானிய விலையில் அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்படுகின்றன. இதில் அரசி இலவசமாகவும், துவரம்பருப்பு, சீனி, கோதுமை சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் மலிவு விலையில் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமானோர் பயன்பெற்று வருகின்றனர். மேலும் குடும்ப அட்டை வைத்துள்ள அனைவர்க்கும் பல்வேறு சலுகைகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதாவது PHH, NPHH, AAY, NPHHS, NPHHNC என்று 5 வகையான குடும்ப அட்டைகள் செயல்பாட்டில் உள்ளன. இதன் தகுதி அடிப்படையில் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பை தமிழக உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்;
*ஜூன் மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெறாத குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூலை மாதம் முழுவதும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
*தமிழகத்தில் தற்போது வரை 15 லட்சத்து 79 ஆயிரத்து 393 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது, புதிய ரேஷன் கார்டுக்கு பெறப்பட்ட 2 லட்சத்து 92 ஆயிரத்து 43 விண்ணப்பங்களில் 9,784 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு குடும்ப அட்டைகள் அச்சிடும் நிலையில் உள்ளன. மீதமுள்ள விண்ணப்பங்களை பரிசீலித்து ஆய்வு செய்து தகுதியுள்ள நபர்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்படும்.
*கண் கருவிழி மூலமாக சரிபார்ப்பு முறையில் பொது விநியோகத் திட்டம் பொருள்கள் 9182 ரேஷன் கடைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து கடைகளிலும் கண் கருவிழி சரிபார்ப்பு முறை செயல்படுத்தப்படும்.
*உணவில் சிறுதானியத்தை சேர்த்துக் கொள்ளும் வகையில் தர்மபுரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் முதற்கட்டமாக 2 கிலோ அரிசிக்கு மாற்றாக, இரண்டு கிலோ கேழ்வரகு வழங்கப்படுகிறது என தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ரேஷன் கடைகளில் பாமாயில் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்றும், அதற்கு பதிலாக உடல் ஆரோக்யத்தை தரும் உள் நாட்டில் உற்பத்தியாகும் தேங்காய் எண்ணைய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய்களை வழங்க வேண்டும்" என்று பல்வேறு கட்சி தலைவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன் மூலம் தமிழக ரேஷன் கடைகளில் பாமயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணைய், நல்லெண்ணெய், கடலை எண்ணைய் இதில் ஏதாவது ஒன்று விரைவில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.