தமிழகத்தில் மிக்ஜாம் புயலின் தாக்கம் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிபேட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆந்திராவில் மிக்ஜாம் புயலானது கரையை கடந்த போதிலும் தமிழகத்தில் கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் தேனி, ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
06.12.2023 நாளை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், மேலும் சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் கனமழை காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் நாளை தமிழகத்தில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் மழையின் தீவிரத்தை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.