தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கான காலாண்டு தேர்வுகள் கடந்த மாதம் செப்டம்பர் 15ம் தேதி தொடங்கி 2 வாரங்கள் நடைபெற்று 27.09.2023 அன்று முடிந்தது. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அக்டோபர் 8ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வி இயக்குனரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செப்டம்பர் 28ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில் மாநில பாடத்திட்டத்தில் செயல்படும் அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் காலாண்டு தேர்வுகள் முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி அக்டோபர் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டது. மாணவர்களும் காலாண்டு விடுமுறையை சுற்றுலா சென்றும், உறவினர்கள் வீடுகளுக்கு சென்றும் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தேர்வு நாட்களிலும் கூட மாணவர்கள் மழையில் நனைந்தபடி பள்ளிக்கு சென்று வந்தனர். இதனால் மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் தமிழகத்தில் டெங்கு காய்ச்சலும் பரவி வருகிறது. இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் அச்சத்தில் உள்ளனர். தமிழக அரசும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தனியார் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை இன்றோடு முடிவடைகிறது. ஆனால் அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் காலாண்டு விடுமுறை விடப்பட்டது போல 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அக்டோபர் 8ம் தேதி வரை விடுமுறை அறிவிக்க வேண்டும் என்றும், மாணவர்களின் நலன் கருதி விடுமுறையை நீடிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்த கோரிக்கைகளை தனியார் பள்ளி நிர்வாகம் பரிசீலித்தும், ஆலோசனை மேற்கொண்டும் விடுமுறையை நீட்டிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.