மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே விஜய் நடித்துள்ள லியோ படம் நேற்று வெளியானது. நேற்று அதிகாலை முதலே உலகம் முழுவதிலும் உள்ள விஜய் ரசிகர்கள் படம் வெளியானதை தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள லியோ படம் வெளியான திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், தேங்காய் உடைப்பு, பால் அபிஷேகம், ஆட்டம் பாட்டம் என ஆரவாரமாக கொண்டாடி மகிழ்ந்தனர். படமும் தளபதி விஜய் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது. இந்த நிலையில் இந்த படம் முதல் நாள் வசூல் குறித்து அறிவிப்பு வெளியானது. லியோ படம் முதல் நாளில் உலக அளவில் ரூ.145 கோடியை அள்ளியிருக்கிறது. சமீபத்தில் வெளியான ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படம் முதல் நாளில் 129 கோடிதான் வசூல் செய்தது. ஆனால் லியோ படம் ஜவானை பின்னுக்கு தள்ளி முதல் நாள் வசூலில் முதல் இடம் பிடித்துள்ளது.
லியோ படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.300 கோடியாகும். ஆனால் முதல் நாளிலே 145 கோடியை அள்ளியிருப்பது ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன் வந்த தமிழ் படங்களில் அதிகபட்சமாக முதல் நாள் வசூலில் ரஜினி நடித்த எந்திரன் 2.0 படம் 113 கோடியே சாதனையாக இருந்தது. ஆனால் லியோ படம் அதையும் முறியடித்துள்ளது. இன்னும் இரண்டு அல்லது 3 வாரங்களில் எப்படியும் 1000 கோடியை வசூல் செய்யும் என்று எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. விஜய் ரசிகர்களும் 1000 கோடியை தாண்டும் என்று கூறி வருகின்றனர்.