தென் மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நீலகிரி, கோயம்பத்தூர், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதற்கிடையில் நீலகிரி கோவை, தேனி, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதில் கேரளா, அசாம், கர்நாடகா மாநிலங்களில் அதிக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நாளை நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் சிங்காரவேலர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெறுகிறது. இதனால் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அந்த மாவட்ட ஆட்சியர், பள்ளி கல்லூரிகளுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும், அரசாங்க ஊழியர்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜூலை 8ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.