தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 உரிமை தொகை யாருக்கு கிடைக்கும், யாருக்கு கிடைக்காது என்ற அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. திமுக அரசின் முக்கிய வாக்குறுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 உரிமை தொகை எப்போது, யாருக்கு வழங்கப்படும் என்று மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் வேளையில் செப்டம்பர் மாதம் 15ம் தேதி இந்த திட்டம் தொடங்கப்பட இருப்பதாக தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான பணிகளை விரைந்து முடிக்க தீவிர நடவடிக்கையில் அரசு மேற்கொண்டு வருகிறது. 1 கோடி பெண்களுக்கு உரிமை தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான கணக்கெடுக்கும் பணிகள் மேற்கொண்டு வருகிறது.
இதில் குறிப்பாக யாருக்கெல்லாம் உரிமைத்தொகை கிடைக்கும், யாருக்கெல்லாம் கிடைக்காது என்ற தகவல் தமிழக அரசு கோட்டை வட்டாரங்கள் தரப்பில் சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதில் குறிப்பாக வருமான வரி செலுத்துபவர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு இந்த உரிமை தொகை கிடைக்காது என்று கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே உதவி தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரக்கூடிய பெண்கள், மாற்று திறனாளிகள், முதியோர்கள், ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் உரிமை தொகையை பெற இயலாது என்ற தகவலும் வெளியாகியுள்ளன. இதை தவிர அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கும் இந்த 1000 ரூபாய் தொகை கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது.
இதே போன்று PHH என்ற வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கும். 35 கிலோ அரிசி வாங்கக்கூடிய PHAAY அட்டைதாரர்களுக்கும் உரிமை தொகை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. புதுமை பெண் திட்டத்தில் பயனடைய கூடிய கல்லூரி பெண்களின் தாய்மார்களுக்கும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் மகளிர் உரிமை தொகையை பெறுவதற்கும் குடும்ப அட்டையில் என்ற ஒரு மாற்றமும் செய்ய வேண்டிய அவசியமில்லை என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரேஷன் அட்டையில் மாற்றம் செய்ய தேவையில்லை என்று அரசு அறிவித்த போதிலும், பலபேர் குடும்ப அட்டையில் தலைவரின் புகைப்படம் மற்றும் NPHH வகை ரேஷன் அட்டையை PHH அட்டையாக மாற்றம் செய்து வருகின்றனர்.
இந்த உரிமைத்தொகைக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டவுடன், பயனாளிகளின் வங்கி கணக்கிற்கே நேரடியாக பணம் செலுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு அஞ்சலக சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டு வருகிறது. இதற்காக குடும்ப அட்டைதாரர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் மகளிர் உரிமை தொகை திட்டைத்தை தொடங்க இன்னும் சில மாதங்களே உள்ளதால், கணக்கெடுக்கும் பணிகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் வீடுகளில் எத்தனை சமையல் கேஸ் சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்ற ஆய்வும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மகளிர் உரிமை தொகை திட்டத்தை வருகிற செப்டம்பர் மாதம் 15ம் தேதியன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கிவைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.