தமிழகத்தில் குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. இதற்கான பணியில் தமிழக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் சமீபத்தில் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு தகுதியானவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு தகுதி வாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்ப தலைவிகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் உரிமை தொகை வழங்கப்படும் எனவும் இதற்கு அவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப அட்டையில் குடும்ப தலைவர் என பெயரிட்டுள்ள பெண் குடும்ப தலைவியாக கருதப்படுவார். குடும்ப அட்டையில் ஆண் குடும்ப தலைவராக குறிப்பிடப்பட்டிருந்தால் அவரின் மனைவி குடும்ப தலைவியாக கருதப்படுவார். குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள அனைவரும் ஒரு குடும்பமாக கருதப்படுவார்கள். திருமணம் ஆகாத பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்ப தலைவியாகத்தான் கருதப்படுவார்கள். ஒரு ரேஷன் கார்டில் குடும்ப தலைவியாக ஒருவர் மட்டுமே இந்த திட்டத்தின் மூலம் பயன் பெற முடியும்.
ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக வசிக்கும் பெண்கள் தனித் தனியாக ரேஷன் அட்டை வைத்திருப்பின் அவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகளிர்க்கு 1000 கொடுக்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கொடுக்கும் பணி ஜூலை 24 முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் முகாம்கள் அமைக்கப்படவுள்ளன. இதனை தொடர்ந்து நாளை (ஜூலை 20ம் தேதி) முதல் டோக்கன் வழங்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அந்த டோக்கனில் எந்த தேதியில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து திருப்பி கொடுக்க வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். ஒரு குடும்பத்திற்கு அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை வேறு குடும்பத்தினர் பயன்படுத்த கூடாது எனவும் விண்ணப்பம் வழங்கிய பிறகு, குடும்ப உறுப்பினரிடம் உரிய படிவத்தில் கையெழுத்து பெற வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.