தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல இடங்களில் மழை நீர் தேங்கியும், மரங்கள் சாய்ந்தும், சாலைகளும் குண்டும் குழியுமாக உள்ளன. இதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்து வருகின்றனர். கனமழை காரணமாக கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான நிலை தற்போது நிலவி வருகிறது. இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கனமழையானது தொடர்ந்து 3 நாட்களுக்கு நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய கூடும்.
மேலும் இன்று அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, மற்றும் தென்காசி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய கூடும். 24.06.2023 ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டியே இருக்கும்.
இன்றும் நாளையும் மன்னார்வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள், அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த நிலையில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வரும் நிலையில், நாளை தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால், கனமழையின் தீவிரத்தை பொறுத்து மாணவர்களின் நலன் கருதி அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.