தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு தேதி குறித்து முக்கியமான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 29ம் தேதியிலிருந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1ம் தேதியும், 1 முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதாக பள்ளி கல்வித்துறை சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் பள்ளி திறக்கும் தேதியை தள்ளி வைக்க வேண்டுமென பெற்றோர்கள், ஆசிரியர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தது வருகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நல சங்க தலைவர் ராஜ்குமார் கூறியதாவது, அனைத்து மாவட்டங்களிலும் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகிறது. அதனால் வயது முதியோர்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலை உள்ளது.
இதற்கிடையில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. ஆசிரியர்கள் பலர், இடமாறுதல் பெற்று வருகின்றனர். அவர்கள் புதிய இடங்களில் பணியில் சேர, கால அவகாசம் வழங்க வேண்டும். மேலும் மாணவர்களுக்கான பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் உள்ளிட்டவை தயாராகி பள்ளிகளுக்கு வரவேண்டியுள்ளன. வெளியூர்களுக்கு சென்றுள்ள பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப பஸ் மற்றும் ரயில் போன்றவற்றில் டிக்கெட் கிடைக்காமல் உள்ளனர். அதற்கு அவகாசம் அளிக்கும் வகையில், பள்ளிகள் திறப்பை ஜூன் 12ம் தேதிக்கு தள்ளி வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். இதே போல பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தது வருகின்றனர். இதுகுறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், தமிழகத்தில் ஏற்கனவே அறிவித்துள்ளபடி பள்ளிகள் திறக்கப்படும். ஒருவேளை பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டால் முதல்வர் அதனை கலந்து ஆலோசித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என தெரிவித்துள்ளார். இதனால் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம் செய்யப்படலாம் என கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.