தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இந்தியா முழுவதும் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா வைரஸ் கடந்த சில வாரங்களாக பல்வேறு மாநிலங்களில் மீண்டும் அதிகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 23000 ஐ கடந்துள்ளது. இதில் குறிப்பாக மகாராஷ்டிரா,குஜராத், கர்நாடகா, டெல்லி, கேரளா, தமிழ்நாடு, இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக பாதிப்பு என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதனால் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் படி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழக மருத்துவமனைகளில் தேவையான படுக்கை வசதி, தேவையான உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருப்பூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகம் உள்ளது. தமிழகத்தில் சில மாவட்டங்களில் கொரோனவால் உயிரிழப்புகளும் ஏற்ப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் முகக்கவவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தியேட்டர், வணிக வளாகம், பொதுமக்கள் கூடும் இடங்களில் மக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என்றும், தனிமனித இடைவெளி, கைகளை அடிக்கடி கழுவுதல் போன்ற கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றும்படி தெரிவித்துள்ளார். மேலும் இனிவரும் நாட்களில் கொரோனா பரவல் அதிகரித்தால் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.