தமிழகம் முழுவதும் இன்ப்ளூயன்சா வைரஸ் காய்ச்சல் மற்றும் ஓமிக்ரான் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக அதிகமாக பரவி வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை தடுக்க தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி, கைகளை சுத்தம் செய்தல் போன்ற கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 12 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வுகள் நடைபெற்று வருகிறது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற ஏப்ரல் 6ம் தேதி தொடங்கவிருக்கிறது. மேலும் 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு ஏப்ரல் 24ம் தேதி தொடங்க இருந்த நிலையில், வைரஸ் காய்ச்சல், கொரோனா மற்றும் கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் தேர்வை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்தவகையில் இந்த தேர்வானது ஏப்ரல் 17ம் தேதி தொடங்கி ஏப்ரல் 24ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக இன்ப்ளூயன்சா வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் நாளை முதல் மார்ச் 26ம் தேதிவரை விடுமுறை என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறுகையில்; தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க கூடிய அளவில் வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.