தமிழகத்தில் பண்டிகை காலங்களில் விடுமுறை விடப்படுவது வழக்கம். இதில் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டால் மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள். அந்தவகையில் தமிழகத்தில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள திருவிழாக்களுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் மற்றும் நகரத்தில் அமைந்துள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில் 18.02.2023 முதல் 02.03.2023 வரை நடைபெறும் மாத பிரம்மோற்சவ தினத்தினையொட்டி 24.02.2023 அன்று வெள்ளிக் கிழமை நடைபெறும் திருத்தேர் உற்சவத்தன்று, இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது என அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் 04.03.2023 அன்று சனிக்கிழமை பணி நாளாக வழக்கம் போல செயல்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் அரசாணை வெளியிட்டுள்ளார்.
மேலும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்ட நாளன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஏதேனும் தேர்வுகள் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தால் அன்றைய நாள் தேர்வுகள் நடத்தலாம் என தெரிவித்துள்ளார். மேலும் விழுப்புரம் மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலை கருவூலங்கள் முக்கியம் பணிகளை கவனிக்கும் பொருட்டு குறைந்த பணியாளர்களை கொண்டு இயங்க அணையிடப்படுகிறது என தெரிவித்துள்ளார்.