வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை இலங்கை திருகோணமலைக்கும், மட்டக்களப்பிற்கும் கரையை கடந்தது. இவை தென்மேற்கு திசையில் நகர்ந்து குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் நாளை நிலவக்கூடும். இதன் காரணமாக இன்று தமிழகத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்படி ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிகக் கனமழையும், கன்னியாகுமரி, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
03.02.2023 அன்று தென்தமிழக மாவட்டங்கள், வடதமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் புகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
இன்றும் நாளையும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை :
கனமழை காரணமாக இன்று நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், நாளை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், கனமழையின் தீவிரத்தை பொறுத்து மாணவர்களின் நலன் கருதி அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை அறிவிப்பார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.