மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட கடல் சீற்றத்தின் காரணமாக கடலோர மாவட்டங்களில் கடல் நீர் ஊருக்குள் புகுந்து மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. மேலும் கனமழை காரணமாக மாணவர்களின் நலன் கருதி அந்தந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டன. இந்த புயலானது வலுவிழந்து கரையை கடந்த போதிலும் தமிழகத்தில் தாழ்வு மண்டலமாக நிலைகொண்டுள்ளதால் இன்னும் தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நாளை தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக் கடலில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் ஒரு புயல் உருவாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலம் மாறுமா அல்லது புயலாக உருவெடுக்குமா என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரிந்துவிடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்புகள் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
கனமழைக்கு பெய்யும் மாவட்டங்கள்
தமிழகத்தில் இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, நாமக்கல், நீலகிரி, கோவை, ஈரோடு, விழுப்புரம், மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். மேலும் டிசம்பர் மாதம் 15ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னைக்கு மழை
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
தமிழகத்தில் கனமழை பெய்து வருவதால் இன்று சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர், மேலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்பதாலும், சென்னை உள்ளிட்ட பலமாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் கனமழையின் தீவிரத்தை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.