நாடு முழுவதும் வருகிற 24ம் தேதி திங்கள் கிழமை தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி பலரும் தங்களுக்கு சொந்த ஊர்களுக்கு செல்வர். இதற்காகவே வெளியூர் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு முடிவு செய்வார்கள். நடப்பாண்டு தீபாவளி பண்டிகை திங்கள் கிழமை வருவதால், அதற்கு முன்னதாக வரும் சனி, ஞாயிறு ஆகியவை வழக்கமான விடுமுறையாக உள்ளன. எனவே மொத்தமாக 3 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இதையொட்டி சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், உள்ளிட்ட நகரங்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகிவிட்டது. எனவே தீபாவளி முடிந்து அன்றைய தினமே வெளியூர் சென்றவர்கள் அவரவர் வசித்து வரும் ஊர்களுக்கு திரும்புவது சாத்தியமானது அல்ல. ஏனென்றால் தீபாவளி பண்டிகை முடிந்து மாலை அல்லது இரவில் ஊர் திரும்புபவர்கள் ஏராளமானோர் இருப்பார்கள் இதனால் பேருந்து மற்றும் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழியும்.
ஆகவே தீபாவளி மறுநாள் சொந்த ஊருக்கு செல்லலாம் என்று பயணிகள் திட்டமிட்டு வைத்திருப்பார்கள். இவ்வாறு திங்கள், செவ்வாய், ஆகிய நாட்களில் மக்கள் பிரிந்து புறப்பட்டு செல்வதால் கூட நெரிசல் குறையும். ஆகவே தீபாவளி மறுநாள் விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலை வரும். இதனால் தமிழக அரசே செவ்வாய் கிழமை விடுமுறை என்று அறிவித்தால், யாரும் விடுமுறை எடுக்க வேண்டிய அவசியம் இருக்காது. மகிழ்ச்சியாக தீபாவளி கொண்டாடி விட்டு அவரவர் ஊருக்கு திரும்புவார்கள். எனவே தீபாவளி மறுநாள் அக்டோபர் 25ம் தேதி செவ்வாய் கிழமை அன்று விடுமுறை அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக பள்ளி மாணவர்கள் எதிர்பார்ப்புதான் அதிகமாக இருக்கிறது.
தீபாவளி விடுமுறை குறித்து அரசு வட்டாரங்கள் தெரிவிக்கையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் தயார் நிலையில் உள்ளன. வெளியூர் பயணிகளுக்கு ஏற்றவாறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தீபாவளிக்கு மறுநாள் அதாவது வருகிற அக்டோபர் மாதம் 25ம் தேதி அரசு விடுமுறை விடுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று அல்லது நாளை அறிவிக்கும் என்று தெரிவித்துள்ளனர். ஆகவே இந்த தீபாவளிக்கு சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என்று தொடர் விடுமுறையாக 4 நாட்கள் விடுமுறை வருவதால் பள்ளி மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கு இந்த விடுமுறை பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.