தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்ற வேண்டும் என்று ஆசிரியர் சங்கத்தினர் தமிழக பள்ளி கல்வித்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிகள் திறப்பு :
தமிழகத்தில் 1-9 வரையிலான பள்ளி மாணவர்களுக்கு 2021-2022ம் கல்வியாண்டிற்கான ஆண்டு இறுதி தேர்வு கடந்த மே 2ம் தேதி தொடங்கியது. இத்தேர்வானது 13ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் மே 14 முதல் கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. ஆனாலும் ஆசிரியர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வர கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 31ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுகள் முடிந்த பிறகு ஜூன் 1ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி துவங்க உள்ளது. இப்பணி ஜூன் 17 வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 1 முதல் 9 வரையிலான ஆசிரியர்கள் மே 20வரை பள்ளிக்கு வருகை புரிய வேண்டும் என்று பள்ளிக் கல்வி துறை உத்திரவிட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிகள், மதிப்பெண் பட்டியல் தயார் செய்யும் பணிகள் போன்றவைகளை மேற்கொள்ள ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இந்த கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் 14ம் தேதி மீண்டும் பள்ளிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆசிரியர்களுக்கும் விடுமுறை கிடைக்கும் வகையில் பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கத்தினர் தமிழக பள்ளி கல்வித்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே கொரோனா தொற்று காரணமாக விடப்பட்ட விடுமுறையை ஈடு செய்ய தொடர்ந்து வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் சனிக்கிழமையும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டது. இவ்வாறு இடைவெளி இன்றி பணி செய்தால் ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். வரும் கல்வியாண்டில் ஆசிரியர்கள் ஓய்வு பெற்று மனா அழுத்தம் இன்றி பணிபுரிய ஏதுவாக பள்ளிகள் திறப்பு தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.