சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் வெளியிட்டுள்ள தகவலின் படி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருகோணமலைக்கு வடகிழக்கில் 220 கிலோமீட்டர் தொலைவிலும், நாகபட்டினத்திற்கு கிழக்கு, தென்கிழக்கு 320 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் அடுத்த 36 மணி நேரத்தில் வட தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமாக மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், நகைப்பாட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
தென்மேற்கு வங்கக்கடல், மத்திய மேற்கு வங்கக்கடல், பகுதிக்கு இன்று மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மீன்பிடி படகுகள் மற்றும் சரக்கு வணிகர்கள் உடனடியாக அருகில் உள்ள துறைமுகத்திலோ அல்லது கரைக்கோ திரும்பும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை?
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கனமழையின் தீவிரத்தை பொறுத்து மாணவர்களின் நலன் கருதி அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.