தமிழகத்தில் மின்நுகர்வோர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு திட்டங்களும் மற்றும் மின்நுகர்வோர்கள் அதிர்ச்சியளிக்கும் வகையில் மின் கட்டண உயர்வு போன்ற முக்கிய தகவல்களும் வெளியாகியுள்ளன. அதை பற்றி இங்கே பார்ப்போம்.
ஸ்மார்ட் மின் மீட்டர்கள்
தமிழகம் முழுவதும் 3 கோடியே 60 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. இந்த நிலையில் மின் நுகர்வோர்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் ஸ்மார்ட் மின் மீட்டர்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. அதன்படி சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் இந்த ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தை சோதனை முறையில் தொடங்க முடிவெடுக்கப்பட்டு திட்டத்தின் செலவாக ரூ.144 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்திய பிறகு மின்சாரத்துறை சார்ந்த ஊழியர்கள் நேரடியாக கணக்கெடுப்பை நடத்தாமல், மென்பொருள் மூலம் மின்கணக்கெடுப்பு தேதி வரும் போது நேரடியாக மின் நுகர்வோரின் செல்போன்களுக்கு SMS அனுப்பப்படும். அதன் மூலம் மின் நுகர்வோர்கள் தங்கள் கட்டணத்தை செலுத்தி கொள்ளலாம்.
நுகர்வோரே மின் கட்டணம் கணக்கிடும் முறை
நுகர்வோரே மின் கட்டணம் கணக்கிடும் வகையில், புதிய கைப்பேசி செயலியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியை கைபேசியில் பதிவிறக்கம் செய்து கொண்டு, மீட்டர் புகைப்படத்தை பதிவேற்றம் செய்த ஒரு சில நிமிடங்களில், மின் கட்டண ரசீது குறுந்செய்தி வாயிலாக நுகர்வோருக்கு அனுப்பப்படும். முதல்கட்டமாக சோதனை அடிப்படையில், மின் வாரிய ஊழியர்களுக்கு இந்த செயலி வழங்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கைப்பேசி செயலியில் மீட்டர் புகைப்படத்தை பதிவேற்றம் செய்தால் ரசீது வந்துவிடும் என்றும் இந்த மின் கட்டண ரசீது நுகர்வோர்களுக்கு குறுந்செய்தி வாயிலாக அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து கட்டணத்தை கணக்கீடு செய்யலாம் எனவும் தமிழ்நாடு மின் வாரியம் தெரிவித்துள்ளது.
மாதம் தோறும் மின் கட்டணம்
தமிழகம் முழுவதும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கணக்கீடு செய்து மின் கட்டணம் செலுத்தப்பட்டு வருகிறது. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கணக்கீடு செய்வதால் மின் பயன்பாடு அதிகமாக இருக்கும் இதனால் மின் கட்டணம் அதிகம் வரும். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு மாதம் தோறும் மின் கட்டணம் செலுத்தும் நடைமுறை அமல்படுத்தப்படவுள்ளது. இந்த நடைமுறையால் மின் கட்டணம் குறையும். மின் நுகர்வோரின் பணமும் மிச்சமாகும். இதனால் மின் நுகர்வோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மின் கட்டண உயர்வு
தமிழகத்தில் மின் கட்டணம் 20% வரை உயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தமிழ்நாடு மின் வாரியம் 1.60 லட்சம் கோடி கடனில் உள்ளது. 2019 ம் ஆண்டு மின் கட்டணத்தை 30% உயர்த்த முடிவு செய்யப்பட்டது, ஆனால் அவை நடைமுறைக்கு வரவில்லை. இந்த நிலையில் நடப்பாண்டு முதல் மின் கட்டணத்தை 20% உயர்த்த உள்ளதாக அரசு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வருகிற மார்ச் 18ம் தேதி தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில் அதில் மின் கட்டணம் உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.