தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை காரணமாக ஊரடங்கில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டன. மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. மேலும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்றது. தமிழக அரசின் கடும் நடவடிக்கை காரணமாக தொற்றுப் பரவல் படிப்படியாக குறைந்தது. இதனால் தமிழக அரசு ஊரடங்கில் தளர்வுகளை அளித்தது. மக்களின் இயல்புநிலை திரும்பியது. பள்ளி கல்லூரி மாணவர்களும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி நேரடி வகுப்புகளுக்கு சென்று வருகின்றனர்.
கொரோனா பரவல் தினசரி பாதிப்பு குறைந்து வந்தாலும் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. எனினும் பொதுமக்கள் வெளியே செல்லும் போது முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளி பின்பற்றாமல் அலட்சியத்துடன் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் வரும் நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் பிரிட்டன் நாட்டில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஓமைக்ரான் வைரஸ் தொற்றின் திரிபான பிஏ2 வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் அதிவேகமாக பரவக்கூடியது என்றும். நுரையீரலை தாக்கக்கூடியதும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையில் சீனாவில் தற்போது புதிய வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸானது சான்சுன் நகரில் பரவி வருவதாகவும் இதனால் அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வைரஸின் பரவும் வேகம், மற்றும் வீரியம் குறித்து தகவல் வெளியாகவில்லை. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா நான்காவது அலை இந்தியாவில் வருகிற மே மாதம் பரவ தொடங்கும் என்றும் இதன் தாக்கம் 4 மாதங்கள் வரை இருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் மத்திய அரசு மாநில அரசுகளிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மக்கள் முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இந்த கொரோனா நான்காவது அலை இந்தியாவில் பல மாநிலங்களில் பரவும் பட்சத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் அதன்படி இரவு நேர ஊரடங்கு, கடைகளுக்கான நேரக்கட்டுப்பாடு, பொது இடங்களில் கூட்டம் கூட தடை, பேருந்து போக்குவரத்தில் புதிய கட்டுப்பாடு, மாணவர்களின் நலன் கருதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் போன்ற முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.