தமிழகத்தில் கொரோனா 3ம் அலை காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதில் இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. மேலும் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டன. இதனால் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்தது. இதனை தொடர்ந்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டன. பள்ளி கல்லூரிகளும் திறக்கப்பட்டு மாணவர்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி நேரடி வகுப்புகளுக்கு சென்று வருகின்றன.
இந்த நிலையில் கொரோனா 4வது அலை இந்தியாவில் ஜூன் 22ம் தேதி தொடங்கி அக்டோபர் வரை தொடரும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதே நேரத்தில் கொரோனா 4வது அலை மிகவும் தீவிரமானதாக இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆகையால் பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல், பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ளுதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா 4வது அலை குறைந்தது நான்கு மாதங்கள் நீடிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இதை கான்பூரில் உள்ள ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். மேலும் கொரோனா 4வது அலை ஆகஸ்ட் 15 முதல் 31ம் தேதி வரை உச்சத்தை எட்டும் என்றும் அதன் பிறகு படிப்படியாக குறையும் என தெரிவித்துள்ளனர். கொரோனா 4வது அலையின் உச்சத்தின் இடைவெளியை கணக்கிடுவதற்கு பூஸ்ட்ராப் எனப்படும் ஒரு முறையை பயன்படுத்தியுள்ளனர். மற்ற நாடுகளிலும் நான்காவது மற்றும் பிற அலைகளை முன்னறிவிப்பதற்கும் இந்த முறை பயன்படுத்தலாம் என்று கூறுகின்றனர்.
வந்துவிட்டது கொரோனா 4வது அலை அதிர்ச்சி தகவல்
இந்த நிலையில் தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் இது குறித்து கூறுகையில், கொரோனா 4வது அலை ஜூன் மாதம் வரலாம் என்றும் ஆகஸ்ட் இறுதியில் தீவிரமாக இருக்கும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே கொரோனா 4வது அலை எவ்வளவு விரைவாக வேண்டுமானாலும் வரலாம். 3வது அலையின் போது தடுப்பூசி போட்டுக்கொண்டு, முகக்கவசம் அணிவது ஆகியவற்றை பின்பற்றி பாதிப்புகளை குறைத்து போல இதையே தொடர்ந்து கடைபிடித்தால் கொரோனா 4வது அலை பாதிப்புகளை குறைக்கலாம். பொது மக்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை சரியாக பின்பற்றவிட்டால் கொரோனா அதிகரிக்கும் பட்சத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் சூழல் உருவாகும் என கூறியுள்ளார். எனவே தமிழகத்தில் கொரோனா அதிகரித்தால் இரவு நேர ஊரடங்கு, கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு, பொது இடங்களில் கூட்டம் கூடத் தடை, பேருந்து போக்குவரத்தில் புதிய மாற்றம், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் போன்ற கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.