தமிழகத்தில் கடந்த மே மாதம் முதல் கொரோனா தொற்று 2ம் அலையின் காரணமாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தமிழக அரசின் தீவிர நடவடிக்கை காரணமாக தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து இயல்பு நிலை திரும்பியது. இந்த நிலையில் தென் ஆப்ரிக்காவில் புதியதாக கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய ஓமிக்ரான் வைரஸ் இதுவரை 60ம் மேற்பட்ட நாடுகளில் பரவி தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியாவில் இந்த ஓமிக்ரான் வைரஸ் மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 33 பேருக்கு இந்த வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த மாநிலங்களில் தீவிர கட்டுப்பாடு விதிக்கும் படி மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துதுள்ளது. மேலும் மற்ற மாநிலங்களுக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் படி அறிவுறுத்தியுள்ளது.
இதனால் பாதிப்பு ஏற்பட்ட மாநிலங்களில் 27 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களை தடை செய்தல், திருமணம் மற்றும் இறுதி சடங்குகளுக்கு வரம்பு விதித்தல் போன்ற நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
மும்பையில் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்புள்ள நபர்களை அடையாளப்படுத்தி அந்த நகரத்தில் இதுவரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 132 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா 3ம் அலையை தடுப்பதற்காக தமிழக அரசு தீவிர நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளது. அதன்படி பாதிப்பு அதிகமுள்ள சென்னை, திருவள்ளூர், வேலூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத நிர்வாகத்தினருக்கும், பொது மக்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் தீவிர கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நாளை ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது. பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு, கடைகள் திறப்பு நேரம் குறைப்பு, பள்ளி கல்லூரி விடுமுறை போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.