தமிழகத்தில் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழகத்தின் கடலோர பகுதி வரை இருப்பதனால் மீண்டும் பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ் நாட்டில் பரவலாக கனமழை பெய்து சென்னை, கன்னியாகுமாரி, நெல்லை, நீலகிரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. தற்போது மழையின் அளவு குறைந்து படிப் படியாக இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் மீண்டும் வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்படி இன்று மதுரை, ராமநாதபுரம் , திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து வருகிற 24ம் தேதி கன்யாகுமரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் இதர மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 25, 26, 27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தெற்கு அந்த மான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி அடுத்த 5 நாட்களில் வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடற்கரையை நெருங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நவம்பர் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றனர். எனவே மீண்டும் சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கனமழை பெய்யும் மாவட்டங்களில் மாணவர்களின் நலன் கருதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.