தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பல மாவட்டங்களுக்கு கனமழை மற்றும் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை, கன்னியாகுமாரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் தமிழக அரசு மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் தென்கிழக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு திசையை நோக்கி நகரக் கூடும் என்பதால் மீண்டும் தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நவம்பர் 17ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சேலம், அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 18ம் தேதி
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
தெற்கு ஆந்திரா வட தமிழக கடற்கரை நோக்கி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகரக்கூடும் என்பதால் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கடலூர், டெல்ட்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். அன்றைய தினம் சென்னைக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 19ம் தேதி
திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், டெல்ட்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நவம்பர் 20ம் தேதி
வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், மற்றும் கள்ளக்குறிச்சி ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.