தமிழகத்தில் டிசம்பர் 1 வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்புக்குள்ளாகியது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நகைப்பாட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் டிசம்பர் 1ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி, ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்ட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல், தெற்கு வங்கக்கடல், மற்றும் தென் வங்கக்கடல் மற்றும் தென் கடலோர பகுதிகளில் மணிக்கு சூறாவளி காற்று 60 கிமீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.