தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் இயந்திரத்தில் கை விரல் ரேகை வைத்து பொருள்கள் வழங்குவதில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை அமலில் உள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் கடந்த ஆண்டு ரேஷன் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைத்தனர். இதன் மூலம் பயோமெட்ரிக் இயந்திரத்தில் கை விரல் ரேகை வைத்து ரேஷன் கடைகளில் பொருள்களை பெற்று வருகின்றனர். சில நேரங்களில் பயோமெட்ரிக் இயந்திரத்தில் சர்வர் கோளாறு காரணமாக கைரேகை வைத்தாலும் கால தாமதம் ஏற்படுகிறது. சில நேரங்களில் ஒரு நபருக்கு பதிவு செய்வதில் 5 முதல் 10 நிமிடம் வரை நேரம் செலவாகிறது. இதனால் பொருள்கள் வழங்குவதில் ரேஷன் கடை ஊழியர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். குடும்ப அட்டைதாரர்களும் நீண்ட வரிசையில் நின்று மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.
இதுபோக ஒரு சில பேருக்கு கைரேகை சரியாக விழாமல் இருக்கிறது. இதனால் வரிசையில் இருக்கும் அடுத்த குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. சிலநேரங்களில் ரேஷன் கடை ஊழியர்களுக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு பயோமெட்ரிக் இயந்திரத்தில் கைரேகை பதியாவிட்டாலும் ரேஷன் அட்டைதரர்களுக்கு பொருள்கள் வழங்கும்படி தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் தமிழக உணவு பொருள் வழங்கல் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மேலும் கைரேகை பதியாவிட்டால் பயனாளர்களை திருப்பி அனுப்பாமல் உரிய பொருள்களை வழங்கும்படியும் ஆணையிட்டுள்ளது.
அதேபோல ஏற்கனவே அறிவித்தது போல வயதானவர்கள் மாற்று திறனாளிகளுக்கு பதிலாக அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட நபருக்கு பொருள்களை வழங்க வேண்டும். மேலும் ஸ்மார்ட் ரேஷன் கார்டை ஸ்கேன் செய்து விரல் ரேகையை சரிபார்க்கவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.