தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு சலுகைகளை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் மற்றும் குடும்ப அட்டைதாரர்கள் மிகவும் பயனடைந்து வருகின்றனர். மேலும் கொரோனா நெருக்கடி காலத்தில் மக்களின் வாழ்வாதாரம் மீட்டெடுக்கும் வகையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.2000 இரு தவணைகளாகவும் மேலும் 14 வகையான மளிகை பெருள்கள் இலவசமாகவும் தமிழக அரசு வழங்கியது. இக்கட்டான சூழ்நிலையில் நிவாரண நிதி மற்றும் அத்தியாவசிய பொருள்கள் அரசு வழங்கியது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெரும் வகையில் தமிழக அரசு ரேஷன் கடைகளுக்கு சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி தீபவளிக்கு இனிப்பு பலகாரம் செய்வதற்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை முன்கூட்டியே வழங்க திட்டமித்துள்ளது. அதாவது நவம்பர் 1 2 3 ஆகிய தேதிகளில் ரேஷன் கடைகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருள்களை வழங்க தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் உத்திரவிட்டுள்ளது.
இந்த நிலையில் ஆவின் நிறுவனம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு இனிப்புகளை தயாரித்துள்ளது. அதன்படி மைசூர் பாகு, ஜாங்கிரி, பால்கோவா, பால் பேடா, மில்க் கேக், லட்டு, நெய் லட்டு, காஜு கட்லி போன்ற இனிப்பு வகைகளை தயார் செய்துள்ளது. மேலும் இந்த இனிப்பு வகைகள் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் தீபாவளி முன்னிட்டு பனை வெல்லம் ரேஷன் கடைகளில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் அறிவிப்பின் படி பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் மூலம் நவம்பர் மாதம் வரை கூடுதலாக 5 கிலோ அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது ஒரு ரேஷன் அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு 5 கிலோ வீதம் அந்த குடும்பத்தில் 4 உறுப்பினர்கள் இருந்தால் 20 கிலோ கூடுதல் அரிசி வழங்கப்படும். இந்த கூடுதல் அரிசியை ரேஷன் கடைகளில் வழங்காவிட்டால் குடும்ப அட்டைதாரர்கள் கேட்டு பெற வேண்டும் என்று அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.