தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நாளை கோவை, சேலம், நீலகிரி, திருவண்ணாமலை, கடலூர் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும், தமிழகத்தின் டெல்ட்டா மாவட்டங்களிலும் மற்றும் பாண்டிச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி கோவை சேலம் தர்மபுரி, விழுப்புரம், பெரம்பலூர் கடலூர் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் பாண்டிச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 15 வரை ராணிப்பேட்டை திருப்பத்தூர், சேலம், தர்மபுரி கோவை, நீலகிரி , கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களிலும், வட மாவட்டங்கள் மற்றும் காரைக்கால், பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் இரண்டு நாட்களுக்கு மேக மூட்டமும் சில பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை தமிழக தென்கிழக்கு, வங்காள விரிகுடா கடல், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 60கிமீ வரை வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.