தமிழகத்தில் ரேஷன் கடைகளில் குறைந்த மானியவிலை மற்றும் இலவச பொருட்களை வாங்க ரேஷன் கார்டு முக்கியம். அதற்கு, உணவு வழங்கல் துறையின், பொது வினியோக திட்ட இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அப்போது, ஆதார் கார்டு முகவரி சான்றிதழ்கள் ஆகியவற்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இணையத்தில் ஆவணங்களை சரிபார்த்து குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவர்களின் வீட்டுக்கு சென்று தனி சமையலறை உள்ளதா என உறுதி செய்து குடும்ப அட்டை வழங்குவர். சமீபத்தில் ரேஷன் கார்டுக்காக விண்ணப்பித்த விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்யாமலே நிராகரிக்கின்றனர். இதன் காரணமாக ஏழை எளிய மக்கள் ரேஷன் கார்டுகளுக்காக விண்ணப்பித்தும் பயனில்லாமல் போகிறது. அவர்களால் ரேஷன் பொருட்களை வாங்க முடியாமல் தள்ளிப்போகிறது.
புதிய ரேஷன் கார்டு குடும்ப அட்டையில் பெயர் நீக்குதல் உள்ளிட்ட ரேஷன் கார்டு சேவைகளுக்கு, ஒரு முறை இணைய தளத்தில் பதிவு செய்து தர, 'பிரவுசிங் சென்டர்' நடத்துவோர், 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை வசூலிக்கின்றனர். விண்ணப்பங்களை நிராகரிப்பதால், ஏழைகள்,மீண்டும் விண்ணப்பிக்க செலவு செய்ய நேரிடுகிறது. இதைப்பற்றி மாநில உணவு ஆணையத்திற்கு, அதிக புகார்கள் சென்றுள்ளன. அதனால், விண்ணப்பத்தில் ஆவணங்கள் சரியில்லை எனக்கூறி, அதை நிராகரிக்காமல், விண்ணப்பதாரரை தொடர்பு கொண்டு பேசுமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. சம்பந்தப்பட்ட ஆவணங்களை நேரில் எடுத்து வர சொல்லி அல்லது அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி உணவு வழங்கல் துறையை மாநில உணவு ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
இம்மாத இறுதியில் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை அறிமுகம்:
தமிழகத்தில் மொத்தத்தில் முப்பத்தி ஐந்தாயிரம் ரேஷன் கடைகள் உள்ளன. தற்போது ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டு பயன்படுத்தி மட்டுமே பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்குகின்றனர். இந்த நடைமுறையில் சில முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் வந்தது. இதனால் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ரேஷன் கடைகளில் உள்ள ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்து வந்தனர். இதனால் பயோமெட்ரிக் முறையை தமிழக ரேஷன் கடைகளில் கொண்டுவர தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. பயோமெட்ரிக் மூலம் அரசுக்கும் இதன்மூலம் பல கோடி ரூபாய் லாபம் கிடைக்கும். பயோமெட்ரிக் முறையை முதல் கட்டமாக ஜூலை மாதம் தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டது . இதைத்தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் செப்டம்பர் 30ம் தேதிக்குள் பயோமெட்ரிக் முறையை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.இதன்மூலம் ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரின் கைரேகையை பதிவு செய்தால் மட்டுமே இனி ரேஷன் பொருட்கள் வாங்க முடியும் என்ற நிலை உருவாகும். இதனால் பொருட்கள் வாங்காதவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். இது அரசுக்கும் அதிக லாபத்தை ஏற்படுத்தி தரும் என்றும் முறைகேடுகளை தடுக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.